Monday 16 February 2009

ஊருக்குத்தான் உபதேசம்...

சிலம்பாட்டம் படம் வெளிவந்த போது நடந்த சம்பவம் இது.

"லேய் மாப்ளே, சிலம்பாட்டம் படத்துல உள்ள பாட்ட கொஞ்சம் கேளேன், ரொம்ப நல்லா இருக்குது பாட்டு" என்றான் என் நண்பன் வெள்ளையன்.

"டேய் வெள்ள, எந்த பாட்டுல?"

"
நலம்தானா, நலம்தானா..."

பாடலைக் கேட்டேன், பாடியவர் வேறு யாரும் அல்ல, ஊருக்கு உபதேசம் செய்து வரும் பிரபல இயக்குனரும், எதைப் பேசினாலும் அடுக்கு மொழியிலேயே பேச முயற்சி செய்து சொல்ல வந்த கருத்தை மறந்துவிட்டு நகைச்சுவை விருந்து அளிப்பவரும், 'அரட்டை அரங்கம்' என்ற பிரபலமான கலந்துரையாடல் நிகழ்ச்சியை தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சியில் மிக மோசமாக நடத்தி வருபவருமான விஜய டி.ராஜேந்தரின் மகன் சிலம்பரசன்தான் அது.

("அதுக்கு இப்ப என்ன?")

பாட்டு உச்சரிப்பில், தமிழ் மொழியை தமிழ் தெரிந்த தமிழர் சிலம்பரசன் கொலை செய்திருக்கிறார்.

"லேய், வெள்ள பாட்ட கேட்டேன்டா,
"நலம்தானா, நலம்தானா, உடலும் உல்லமும் நலம்தானா?" ன்னு வருது, தமிழ் தமிழ்னு பேசுறவங்க வீட்டுலயே இப்படி ஒருத்தன் இருக்கான் பாரு!" என்றேன்.

"பாட்டு நல்லா இருக்குதுன்னு சொல்லிட்டு இருக்கேன், நீ என்னடான்னா, உன் இஷ்டத்துக்குப் பாட்ட குறை சொல்லிட்டு இருக்கா, என்னடே?" என்றான் வெள்ள.

"பாட்ட குறை சொல்லலடா வெளக்கெண்ணை, அந்த பாட்டு நல்லாத்தான் இருக்கு. பாட்டுக்கான நடனமும் நல்லாத்தான் இருக்குது; ஆனா உச்சரிப்பு? அதுல வர்ற உச்சரிப்பைக் கவனி. நடனம் ஆடுறதுல செலுத்துற கவனத்த பாடுறதுலயும் காட்டலாமில்லையா?"

"ஏய், இப்பல்லாம் எல்லாருமே அப்படித்தானப்பா பாடுதானுவ, நீ என்னவோ சிலம்பரசன் மட்டும்தான் அப்படி பாடுறதா சொல்லுதா?"

"லேய், தமிழ் தெரியாதவன் தப்பா படிச்சா கூட சும்மா விட்டுடலாம்டா, ஆனா வேணுமின்னே வித்தியாசமா இருக்கட்டும்னு தப்பு தப்பா படிக்கிரவனுவள என்ன சொல்றது? முந்தில்லாம் கே.ஜே. ஜேசு தாஸ், 'ல', '' உச்சரிப்பு தெரியாம படித்த காரணத்தால் அதை திருத்தி ஒழுங்காக பாடச் சொன்னதால, ஜேசு தாஸ்க்கும் தனக்கும் கருத்து வேறுபாடு உண்டானதா கவிஞர் வைரமுத்து, 'பாட்டு பட்ட பாடு' ன்னு ஒரு நிகழ்ச்சியில சொல்லி இருக்காரு." என்றேன் நான்.

"அப்படியா! எப்போ?"

"ஒரு இருபது வருசத்துக்கு முன்னாடி, 'நீங்கள் கேட்டவை'ன்னு ஒரு படம், தியாக ராஜன் நடிச்சது. அதுல 'பிள்ளை நிலா, இரண்டும் வெள்ளை நிலா' ன்னு பாடுரதுக்குப் பதிலா 'பில்லை நிலா இரண்டும் வெள்ளை நிலா'ன்னு பாடியிருப்பார் ஜேசு தாஸ்
"ஒரு மலையாளத்து பாடகர் தமிழ் நல்லா உச்சரிக்கணும்னு, வைரமுத்து போன்றவர்கள் நினைக்கும் போது, ஊரு நியாயம் பேசிட்டு அலையுற டி.ராஜேந்தர் மகன் ஒழுங்கா தமிழ் உச்சரித்துப் பாடக் கூடாதா என்ன?"

"லேய், கண்ணேதிரே தோன்றினாள் படத்துல கூட ஒருத்தரு இப்படி பாடி, அர்த்தத்தையே மாத்திட்டாரு...பிரியமான பெண்ணை ரசிக்கலாம் என்பதை பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம் என்று பாடிவிட்டார் பாடகர், தெரியும்லா?

"அது தெரியும், ஆனால் அந்த பாட்ட படிச்சவன் ஒண்ணும் தமிழன் கிடையாது."

"அது இருக்கட்டும், டி.ராஜேந்தர் எங்கடே ஊர் நியாயம் பேசிட்டு அலையுறாரு?"

"அரட்டை அரங்கத்துல ஊரு நியாயம் பேசாம வேற என்ன பண்றாராம்; அது மட்டும் இல்ல நாலஞ்சி வருசத்துக்கு முன்னாடி விஜய் டிவியில நியாயம் என்றும் சொல்வேன்னு ஒரு நிகழ்ச்சி நடத்துனாரு".

"அதுக்கு சம்பளம் கொடுக்குறாங்க அதனால பேசுறாரு."

"அப்படியா, சரி விடு. போன வருசம், சினிமா சம்பந்தமான ஒரு விழாவுல நடிகை த்ரிஷா ஆங்கிலத்துல பேசியதைக் கண்டு, அனைவர் முன்னிலையிலும்
'நீ தமிழ் நாட்டுல பிறந்து வளர்ந்த பெண்தானே, உனக்கு தமிழ் தெரியாதா?....'என்று பொங்கி எழுந்து அழ வைத்தவர் டி.ராஜேந்தர், இது தெரியுமா உனக்கு. இது சம்பளத்துக்காக பேசிய பேச்சா, உண்மையிலே தமிழ் மீது கொண்ட அக்கறையினால் பேசிய பேச்சா அல்லது தான் ஒரு தமிழ் உணர்வாளன் என்று காட்டிக் கொள்வதற்காக போட்ட வேசமா?"

"ஏய், அரசியல்வாதிகள் என்னக்குப்பா ஒழுங்கா இருந்துருக்காங்க?...அவங்க பண்ணுறதெல்லாம், 'ஊருக்குத்தான் உபதேசம்'ங்குற கதைதான்.."

1 comment:

Anonymous said...

Hi

உங்கள் வலைப்பதிவ வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

உங்கள் இணைப்பை இப்பூக்களில் பார்க்கவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Post a Comment